செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

இந்தியாவில் கவர்னர் பதவி என்பது ஓய்வு பெற்றவர்களுக்கானது தானா? அரசியல் விளையாட்டுக்காக அந்த பதவி உபயோக படுத்தப்படுகின்றதா? கவர்னரின் தகுதி என்ன? வாருங்கள் அலசலாம்....

தமிழக கவர்னர் திரு ரோசையா அவர்களின் பதவிக்காலம் முடிய போகும் இந்த நேரத்தில் யார் தமிழகத்திற்கு அடுத்த கவர்னராக வர வாய்ப்புள்ளது என்ற தேடலில் பாஜக முன்னாள் அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா விரைவில் தமிழக ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கின்றன.



யார் இந்த முன்னாள் அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா என்பது தெரியுமா..பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்க கூடாது என்று கருதியதால் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய அமைச்சரவைக்கு வேண்டாத அந்த 75 வயது நபர் எப்படி ஒரு மாநிலத்தை மேற்பார்வையிடும் கவர்னர் பதவிக்கு மட்டும் சரியான தேர்வாக இருக்க முடியும்.நிச்சயமாக இது சரியான கேள்வியாக இருக்கும்.

சமீபத்திய ஆளுநர் பதவிகள் அனைத்தும் யாருக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என்று சற்று யோசித்து பாருங்கள்...நானும் தேடி பார்த்து விட்டேன்...

யாரையேனும் ஒரு தலைவரை ஒரு பதவியில் இருந்து தூக்க நினைத்தால் அவர்கள் மனம் கோணாதபடி இருக்க அவர்களுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்படும்.

தேர்தலில் முன்னிறுத்தி அந்த நபர் தோல்வி அடையும் பட்சத்தில் அவருக்கு ஆறுதலாக அளிக்கப்படும் பதவி ஆளுநர் பதவி - கிரண் பேடி* அவர்கள் டெல்லி தேர்தலில் பிஜேபி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்பு பாண்டிச்சேரி ஆளுனராக நியமிக்க பட்டார்.

ஏன் எப்பொழுதும் இந்த ஆளுநர் பதவி மட்டும் இப்படி அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

திரு மோடி அவர்களே உங்கள் அமைச்சரவைக்கு எப்படி 75 வயது நிரம்பியவர் தேவை இல்லையோ அதைப்போலவே எங்களுக்கும் 75 வயது நிரம்பியவர்கள் தேவை இல்லை.

நாங்கள் இப்படி கேள்வி எழுப்பினால்,எங்கள் கேள்விகளுக்கு உங்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும் "அரசியல் முதுமை அடைந்தவரே ஆளுநராக இருக்க தகுதி வாய்ந்தவர்" .

அப்படி நீங்கள் நினைத்தால் அவர்களை நீங்கள் நீக்க காரணம் என்ன? உங்கள் கட்சியை சேர்ந்தவர் மட்டுமா 75 வயதுக்கு பிறகும் அத்தனை திறமையுடன் இருக்கின்றார் இன்னும் எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றார்களே அவர்களையும் நியமிக்கலாமே?

கட்சிக்காரர்கள் மட்டுமா ஆளுநராக இருக்க முடியும், எத்தனையோ மேதைகள் படித்த அறிவாளிகள் இந்தியாவில் இருக்கின்றார்கள் அவர்களை நியமிக்கலாமே?

இந்த 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 35 வயது நிரம்பிய 60 வயத்துக்குள்ளாக நீங்கள் விரும்பும் திறமையான ஆளுநர் பதவிக்கு தகுதியான நபரே இல்லையா?

மொழி தெரியாத ஆளுநர்கள்:

ஆளுநர் என்றாலே அவருக்கு அந்த பிராந்திய மொழி தெரியாது. அப்படிப்பட்டவரே அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் அவர்களின் தாய் மொழியினையே பெரும்பாலும் பேசுவார்கள்.அவர்களுக்கு இந்தி தெரிய வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது அந்த மக்களின் மொழி தெரியாத ஒருவரை ஆளுநராக நியமிப்பது எத்தனை கொடுமை. மக்களின் குறைகளை மக்களின் குரலால் கேட்டு புரிந்து கொள்ளமுடியாத ஒருவருக்கு ஆளுநர் பதவி என்பது எப்படி சரியாகும்.

ஊர்மாற்றம் எனும் தண்டனை :

ஆளுநரை நியமிக்க தான் இப்படி என்றால் அந்த ஆளுநரையே பதவி இறக்க நடக்கும் வேலைகள் இன்னும் அபத்தம். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய சொல்லும். ஆனால் இது சட்டப்படி தவறு. எனவே மறைமுகமாக அவர்களுக்கு பதவி விலக ஆலோசனை வழங்கப்படும். அப்படி அவர்கள் செல்ல மறுத்தால் அவர்களை வடகிழக்கு மாநிலம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்து அவர்களை தானாகவே அந்த பதவியை ராஜினாமா செய்ய வைக்கபடுவார்கள்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் விருப்பம் இருக்கும் வரைதான் அந்தப் பதவியை வகிக்க முடியும். இங்கு குடியரசுத் தலைவரின் விருப்பமென்பது மத்திய அமைச்சரவையின் உத்தரவு என்று பொருள்படும். ஏனென்றால், குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டப்படி மத்திய அமைச்சரவையின் உத்தரவுகளை நிறைவேற்றக் கடைமைப்பட்டவர்.ஆனாலும் உச்சநீதிமன்றம் ஒரு ஆளுநர் தகாத முறையில் நீக்கப்பட்டால், அதைச் சீராய்வு செய்து குடியரசுத் தலைவர் போட்ட உத்தரவை ரத்துசெய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டென்று அறிவித்தது.

கவர்னர் ஆக என்ன தகுதிகள் வேண்டும் :

இந்தியாவில் கவர்னர் ஆக ஒரே ஒரு தகுதி மட்டும் இருந்தால் போதுமானது. ஆம் அவர் இந்திய குடிமகனாக 35 வயது பூர்த்தி ஆகியிருந்தால் அதுவே போதும். வேறு எந்த அரசு பணியிலும் அமைச்சரவையிலும் இருத்தல் கூடாது.

ஆளுநரின் முக்கிய பொறுப்புகள் : [Source : Wikipedia]

பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.
முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.
அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.
மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது
சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது
சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.)
மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் (அ) சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபுசார்ந்த அதிகாரமே, ஆளுநர் பணமசோதாவைத்தவிர வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு மசோதாக்களுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், அம்மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், தன் விருப்புரிமையின் அடிப்படையில் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்
ஆளுநர் அவசரகாலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம். அவசரகாலத்தில் ஆளுநரே அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார். மேலும் அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.
ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர்(Chancellor) ஆவார்.

துணை நிலை ஆளுநர்கள்

இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையைக் கொண்டவர்கள். 

இத்தனை காலங்கள் இருந்தது போதும் இனிமேலாவது மக்களின் மொழி தெரிந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட தகுதி வாய்ந்த பெரும் மனிதர்களை ஆளுநராக நியமனம் செய்யுங்கள். அந்த பதவிக்கு மரியாதையை கொடுங்கள்...

நன்றி 
ஸ்ரீ





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக