திங்கள், 21 மார்ச், 2016

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு தமிழக இளைஞன் எழுதும் மடல்....

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு தமிழக இளைஞன் எழுதும் மடல்....



நான் படித்ததுண்டு ,உங்கள் அம்மாவின் ஆசைக்கு இணங்கியே நீங்கள் நடிகையாக உங்கள் பயணத்தை தொடங்கினீர்கள் என்று..உங்கள் தாயார் நிச்சயமாக உங்கள் திறமை அறிந்தே அவ்வாறு கூறியிருகின்றார். உங்கள் சிறு வயதில் மயிலாப்பூரில் நடத்திய அரங்கேற்றம் கண்டு நடிகர் திலகம் சிவாஜி அவர்களே வியந்து பாராட்டினார்கள் என்பதே அதற்கு சான்று...

மதிப்பிற்குரிய MGR அவர்கள் DMK வில் இருந்து பிரிந்து ADMK ஆரம்பித்த பொழுது நீங்கள் அந்த கட்சியின் கொள்கை பரப்பு பேச்சாளராக உங்கள் அரசியல் பயணத்தை ஆரம்பித்தீர்கள்..உங்கள் தெளிவு மிகுந்த பேச்சும் கருத்துக்களுமே ADMK வை மக்கள் முன்பு கொண்டு சென்றது...

மாண்பு மிகு MGR அவர்களின் மறைவிற்கு பின்பு ADMK சிதறிப் போகும் என்று எண்ணிய காலகட்டத்தில் ADMK விற்கு உயிர் அளித்தீர்கள். அடுத்தடுத்த காலங்களில் நீங்கள் ஆட்சியையும் பிடித்தீர்கள்..

அரசியல் வல்லுனர்கள் ஒரு பெண்ணால் இவ்வளவு பெரிய கட்சியையும் அரசையும் வழி நடத்தி செல்வதென்பது முடியாத காரியம் என்று சொன்ன ஆருடம் பொய்யென்று உணர்த்திக்கொண்டு இருக்கின்றிர்கள். உங்கள் மன உறுதியும் தீவிர செயல்பாடுமே உங்கள் வெற்றிக்கான காரணம்.

உண்மையான இளைஞனாக ஒரு பெண் முதல்வரை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களது உறுதியான முடிவெடுக்கும் திறனும் ஆட்சி நடத்தும் விதமும் கண்டு வியக்காதவர்கள் இல்லை!! 

உங்களை கொண்டாடும் அதே நேரத்தில் உங்களிடம் உள்ள குறைகளையும் சுட்டி காட்டிட வேண்டிய உரிமை எனக்கு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முதலாவதாக சொத்துகுவிப்பு வழக்கு... எனக்கு தெரிந்த வரையில் உங்களுக்கு சொந்த பந்தங்கள் இல்லை. மேலும் நீங்களே பலமுறை சொல்லி இருக்கிறீர்கள் எனக்கு சொந்த பந்தங்கள் இல்லை தமிழக மக்களே என் சொந்தம் என்று. அப்படி இருக்கையில் நீங்கள் சொத்து சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் முதல்வர் பணிக்காக ஒரு ரூபாய் சம்பளம் பெறுவேன் என்று சொன்ன போது நான் பெருமிதம் கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு ரூபாய் சம்பளம் பெரும் ஒரு முதல்வர் இவ்வளவு சொத்துகளை சேர்த்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய போது நான் அதிர்ந்து போனேன். தாங்களும் தங்களை சுற்றி இருப்பவர்களும் நல்லது செய்யும் போது அதன் பெருமை எப்படி உங்களை சேருகின்றதோ அதை போலவே அவர்கள் தவறு செய்யும் போதும் அதன் பலன் உங்களையே சேருகின்றது.

அதற்கடுத்தபடியாக, எங்கள் குறைகளையும் தேவைகளையும் மக்கள் மன்றத்தில் தெரிவிப்பதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய MLA அனைவரும் எங்கள் குறைகளை தெரிவிப்பதில் கவனம் குறைந்து உங்கள் புகழ் பாடுவதிலேயே அதிக நேரம் எடுத்து கொள்கின்றார்கள். இவர்கள் இப்படி புகழ் பாடுவது மக்களால் ரசிக்க படுவதில்லை.அவர்கள் சொல்லித்தான் உங்கள் புகழ் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. நீங்கள் இதனை விரும்புகிறீர்களா என்பது எனக்கு தெரியாது ஆனால் இதை நீங்கள் தவிர்க்கும் படி ஆணையிட்டால் நன்றாக இருக்கும்.

உறுதியும் துணிவும் தான் உங்கள் வெற்றிக்கு காரணம் என்பதை அறிவோம். ஆனால் நீங்கள் அதே உறுதியை மது விலக்கு கொள்கையிலும் கடை பிடிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம். உண்மையாகவே உங்கள் அரசால் மதுவினால் வரும் பணம் அன்றி ஆட்சி நடத்த முடியாதா? மதுவிலக்கு நிச்சயம் உங்களுக்கு நல்ல மதிப்பினைபெற்று தரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மதுவிலக்கு அறிவிக்க மறுப்பது உங்களை அம்மா என்றழைக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா என்பதை உங்கள் முடிவுக்கே விடுகின்றேன்.

சென்னை மக்களின் முகம் சுளிக்க வைத்த அடுத்த விஷயம் கட் அவுட் கலாச்சாரம். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நீங்கள் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் நேரங்களில் கோட்டூர்புறம் சாலையில் வைக்கப்படும் கட் அவுட் களை தரையில் விரித்தால் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் முழுவதையும் மறைத்து விடலாம் என்பது போன்று இருக்கும்.. நான் அந்த வழியாக செல்லும் போது பெரும்பாலான மக்கள் சொல்வது "பாரு மக்கள் காச எப்படி வீணாகுறாங்க" என்ற புலம்பலைத்தான். உண்மையாகவே இந்த செயல்கள் மக்கள் மனதில் எதிர் எண்ணங்களையே விதைக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

காலம் முன்னேரிவிட்டது ! மக்கள் உங்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருகின்றார்கள். அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்லாட்சி மட்டுமே. அவர்களின் மனங்களை கவர கட் அவுட் வைக்க வேண்டியதில்லை திரையரங்குகளில் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை இலவசம் அறிவிக்க வேண்டியதில்லை ..நீங்கள் மக்களின் உயர்வுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சி நடத்தினாலே மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்..

இந்த கடிதம் உங்களால் படிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் ...

உண்மையுடன்
ஸ்ரீதரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக