புதன், 28 டிசம்பர், 2016

ஜல்லிக்கட்டு தடை பிரச்சனையை சமூக மாற்றம் என்கிற முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து உங்களுக்கு அளித்திருக்கிறேன்...


ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது ...ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரியம் சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் செய்வது தவறா?

இந்த பிரச்சனையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து உங்களுக்கு அளித்திருக்கிறேன்...

கால மாற்றத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன ...சில காலத்திற்கு  முன்பு இருந்த பழக்கவழக்கங்களில் சில கால ஓட்டத்தில் மாறுதல் அடைந்தன ...சில மாற்றம் அடையாத ஆனால் சமுகநீதிக்கு எதிராக அந்த பழக்கவழக்கங்கள் இருந்தால் நீதிமன்றம் உத்தரவின் மூலமாக அதை மாற்றி வந்துள்ளன ...இந்த மாற்றங்கள்  நிறைந்த சமூகமே முன்னேறிய சமூகம் என்றும் ,சமூகம் அதை நோக்கி தானாக நகராத போது  சட்டம் மக்களை நகர்த்தி கொண்டும் போயிருக்கிறது ..

உதாரணமாக பெண்கள் வேலைக்கு செல்வதை ஒருகாலத்தில் கேவலமாக நினைத்திருந்த இந்த சமூகம் கால ஓட்டத்தில் மாறி இன்று பெண்கள் வேலைக்கு செல்வது சாதாரணமாக மாறியுள்ளது ....(ஒருவேளை இந்த மாற்றம் தானாக நடக்காமல் போயிருந்தால் இன்று அதற்கும் சட்டம் வந்திருக்கலாம்)
அதேநேரத்தில நாம் பாரம்பரியம் என்று கருதி சிறுவயதிலேயே பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தோம் ..இந்த பழக்கவழக்கம் கால ஓட்டத்தில் மறையாமல் போகவே சட்டத்தின் மூலமாக இன்று அது தடுக்கப்பட்டு வருகின்றது ....

ஒரு முன்னேறிய சமூகம் குழந்தை திருமணம் செய்ய கூடாது என்பதாலும்  மக்களே கால ஓட்டத்தில் மாறாத காரணத்தினாலும் சட்டம் மக்களை கட்டுப்படுத்தி விட்டது .
ஆக இந்த சமூகம் ஒரு மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றது ..அந்த மாற்றம் இயற்கையாக நடந்தால் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுகிறோம். ஒருவேளை அந்த மாற்றம் இயற்கையாக நடக்கவில்லையெனில் ஒரு சட்டத்தின் மூலமாக இந்த சமூகத்தின் மீது திணிக்கப்படுகிறது ....மக்களும் அதன்படியே நடக்கிறார்கள் .

இதே போன்ற நிலமை தான் இன்று பெண்களை கோவில்களுக்குள் அனுமதிக்கும் விவகாரத்திலும் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கும் விவகாரத்திலும் நடைபெறுகின்றது .
பெண்களை சில கோயிலுக்குள் நுழைய அனுமதி  மறுப்பதை இன்றும் பாரம்பரியம் என்கிற பெயரில் அதன் நிர்வாகத்தினர் கூறிவந்தாலும், சட்டம் மூலமாக அனுமதிக்க வேண்டும் என்கிற நிலை உண்டாக்கப்படுகின்றது .....இதுவே சமூக முன்னேற்றமாகவும் நாம் பார்க்கின்றோம் ...இதையே அனைவரும் ஏற்கிறோம் ...அந்த பாரம்பரியத்தை கடைபிடித்தவர்கள் எதிர்த்தாலும் மாற்றத்தை கொண்டு வருகின்றோம் ...ஒரு முன்னேறிய சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு அனைத்து இடங்களுக்கும் செல்ல அனுமதிக்கவேண்டும் என்கிற எண்ண ஓட்டத்தினால் ..

இதே மனநிலையோடு நாம் ஜல்லிக்கட்டு பிரச்சனையையும் அணுகினால் உண்மையை அறிய முடியும் ...ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியமான வீர விளையாட்டு (நமக்கு மட்டும் ) ஆனால் பொறுப்பில்   இருப்பவர்கள் விலங்குகளை துன்புறுத்துவது தவறு என்கின்றனர் .
அதுவே முன்னேறிய சமூகத்தின் மாற்றமாகவும் பார்க்கப்படுகின்றது.


ஜல்லிக்கட்டு விளையாட்டு நம் அளவில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காததை போன்று பாரம்பரியம் மிக்கதாக இருந்தாலும் விலங்குகளை துன்புறுத்துவது தவறு என்பதை சமூக முன்னேற்றத்தின் ஒரு கூறாக நினைக்கிறார்கள் ...நாம் அதனை ஏற்காத போது சட்டத்தின் மூலமாக திணிக்கிறார்கள் ...

நாட்டுமாடுகளை  ஒழிக்க நடக்கும் சதி போன்றவைகளே ஒதுக்கிவிட்டு பார்த்தோமேயானால் நம்மால் இந்த பிரச்சனையை உணர்ந்து இது
எதனால் எங்கு நோக்கி நகர்கின்றது என்பது உங்களுக்கு புரியும் ...

நாம் அனைவரும் நினைப்பது போல இந்த அரசியல் கட்சிகளுக்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்க விருப்பமா என்றால் இல்லை என்பதே உண்மையாக இருக்க முடியும் ..இல்லையென்றால் காளைகளை பட்டியலில் இணைக்கும் போதே தடுத்திருக்க முயன்றிருக்கும் ..அப்போது செய்யாமல் போனதற்கு காரணம் அவையும் இந்த இந்த முன்னேறிய சமூகத்திற்கு இனி ஜல்லிக்கட்டு தேவை இல்லை என்று எண்ணியிருக்கலாம். ..ஆனால் மக்களின் வாக்குக்காக இன்று நடிக்கின்றன ...

இந்த பதிவை படித்த பின்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் என்று எண்ணிவிட வேண்டாம் ...நானும் தமிழ்மகன் தான் ...ஆனால் வேறொரு கோணத்தில் சிந்திக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் .

நன்றி
ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக