இப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் விலை அடிக்கடி ஏன் தினந்தோறும் மாறிக்கொண்டே போகின்றது (உயர்வது ரூபாயில் ..குறைவது பைசாவில் ). இதற்கு காரணமாக கச்சா எண்ணையின் விலை உயர்வை அனைவரும் காரணம் காட்டுகின்றனர். முன்பு விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துகொண்டிருந்தது. கடந்த ஆட்சியில் இந்த உரிமை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பின்பு விலையை அவையே நிர்ணயம் செய்து கொள்கின்றன.
ஏன் இவ்வளவு விலை :
நாம் சர்வதேச சந்தையில் இருந்து கச்சா எண்ணையாகவே இறக்குமதி செய்கின்றோம். அப்படி செய்கின்றபோது ஒரு பேரலின் அடக்கவிலை 58.5 டாலர் இந்திய மதிப்பில் ரூ 3970. ஒரு பேரலில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் இருக்கும் .
ஒரு பேரல் = ரூ 3970
ஒரு லிட்டர் =3970/159 = 24.96 (ரூ 25)
ஆக இறக்குமதி செய்யப்படுகின்ற கச்சா எண்ணையின் விலை ரூ 25மட்டுமே .
விலையேற்றம் எப்படி :
ஒரு லிட்டர் 25 ரூபாயாக இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்பு பெட்ரோல் ஒரு லிட்டர் 31.54 ரூபாய்க்கும் டீசல் 30.34 ரூபாய்க்கும் வெளிவருகின்றன.
இந்த சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலுக்கு வரியாக மத்திய அரசு 21.48 ரூபாயும் டீசலுக்கு 17.33 ரூபாயும் விதிக்கின்றன.இந்த வரிவிதிப்பு பெட்ரோல் பங்குகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக விதிக்கப்படும்.
பெட்ரோல் விலை : ரூ 53.02
டீசல் விலை : ரூ 47.67
மாநில அரசின் வாட் (வரி) :
மத்திய அரசின் வரிவிதிப்பு போக ஒவ்வொரு மாநில அரசும் 27% வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கும் 16.75% வரை டிசலுக்கும் வரிவிதிக்கின்றன. இந்த வரிவிதிப்பு சில மாநிலங்களில் குறையலாம் அதனால் தான் சில மாநிலங்களில் விலை குறைவாக விற்கப்படும்.இதனுடன் சேர்த்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கமிஷனாக 2.58 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கும் 1.65 ரூபாய் டீசலுக்கும் இணைக்கப்படும்
பெட்ரோல் விலை : 53.02 + 15.01 (வாட் வரி + 25 பைசா சுற்றுசூழல் பாதுகாப்பு ) + 2.58 (கமிஷன்)
கடைசி விற்பனை விலை : ரூ 70.6
டீசல் விலை : 47.67 + 8.51 (வாட் வரி + 25 பைசா சுற்றுசூழல் பாதுகாப்பு ) + 1.65 (கமிஷன்)
கடைசி விற்பனை விலை : ரூ 57.82
அரசின் கடமை என்ன ?
மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களது வருமானத்திற்கு பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படும் வரியையே சார்ந்து இருக்கின்றன. இதனால் தான் அடக்கவிலையை காட்டிலும் அதிகமான வரி போடப்படுகிறது. அரசாங்கம் எப்போது வருமானத்திற்கு மாற்று வழியினை ஏற்படுத்தி கொள்கிறதோ அப்போது தான் வரிவிதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்திற்கு பல நிறுவனங்கள் உண்டு. அவை லாபம் தரவில்லையென்று கூறி தனியாருக்கு தாரை வார்த்துக்கொண்டிருக்கின்றன.இவைகளை நிறுத்தி அந்த நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தி லாபம் ஈட்டலாம்.
இந்த முயற்சியில் அரசாங்கம் ஈடுபடவில்லை என்றால் விலையேற்றம் வருவாய்க்காக இருந்துகொண்டே போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக