அம்மாவிற்கு அதிகம் வலி கொடுக்காமல் பிறந்தேனாம் . ஆயா அடிக்கடி சொல்லுவார் . நான் பிறந்த உடன் குடும்பமே சந்தோச வெள்ளத்தில் மிதந்து போனதாம் .
முதல் பிறந்தநாள் ஊர் முழுக்க சொல்லி விருந்துபடைத்து கொண்டாடியிருக்கிறார்கள் . அது நான் வளர்ந்து பெரியவள் ஆன பிறகும் தொடர்ந்தது . அதட்டி பேசாத அப்பா , கேட்டதை செய்துதரும் அம்மா என சந்தோச மழையிலேயே நனைந்து கொண்டிருந்தேன் .
நான் நினைத்த படிப்பையும் படிக்க முழு அனுமதி கொடுத்தார்கள் என் வீட்டார் . நானும் நன்றாக படித்தேன் .
ஒருநாள் திடீரென அப்பாவின் நண்பர் என கூறிக்கொண்டு நெத்தியில் பட்டையுடன் ஒருவர் வந்தார் . ஏதோ பேசினார்கள் . திடீரென்று அவரது மகன் வெளிநாட்டில் இருப்பதாகவும் இந்த மாத இறுதியில் வரப்போவதாகவும் வந்தவுடன் திருமணத்தை நடத்திட வேண்டுமாம் . பிறகு அவருடனே வெளிநாடு செல்லனும் என்றார் அப்பா .
நான் படிக்கிறேன் இன்னும் முடியவில்லையே என்றேன் . போதும்மா நீ ஆசைப்பட்டதால் படிக்க வச்சோம் இப்போ எங்க ஆசைக்காக சொல்ற பையன கல்யாணம் கட்டிக்கோமானு சொல்லிவிட்டார் அப்பா . அதிலும் நியாயம்தான் நான் கேட்டதையெல்லாம் கொடுத்து படிக்கவும் வைத்த அப்பாவே சொல்லும்போது மறுக்க முடியவில்லை .
என்னை கட்டிக்கொள்பவர் வந்தார் , பேசினோம் பழகினோம் . பிடித்தும் இருந்தது . திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கின்றது .
சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கே வந்தோம் .மாற்றம் வந்தது , அவர் முன்னைப்போல இல்லை , குடிக்கிறார் , குழந்தையோடு சேர்த்து என்னையும் அடிக்கிறார் . பொறுத்துப்பார்த்தேன் .
எனக்கு இந்த மாற்றமெல்லாம் புதிதாக கஷ்டமானதாக தெரியவில்லை . காரணம் என்னை கட்டிக்கொண்டவனுக்கு என்னுடைய தற்போதய மனமும் தேகமும் தான் தெரியும் .
இனி முடியாது , நம்மை கொண்டாடிய நமது வீட்டிற்கே போய்விடலாம் என நினைத்தேன் .
ஆனால் என் அப்பா அம்மா மற்றுமுள்ள என்னை சிறு வயதிலிருந்தே கொண்டாடிய உறவுகள் அனைத்தும் என் கணவன் அடிப்பதை கூறினாலோ அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் .
சிறு வயதில் என் பக்கத்து வீட்டு ரம்யா விளையாடும்போது அடித்துவிட்டால் என அழுதுகொண்டு சென்றபோது ரம்யாவின் வீட்டோடு சண்டைபோட்ட அம்மா கணவன் அடித்து வலிக்கிறதம்மா என கூறினால் கண்களை மட்டுமே கசக்கி கொண்டிருக்கிறார் .
காரணம் அவன் என் கணவன் . குடும்பம் என்றால் அப்டித்தான் இருக்கும் . இதுவே அவர்களின் அமைதிக்கு காரணமாம் . எனக்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை , மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவனுக்கு இருக்கும் உரிமை என்னை பெற்று வளர்த்து கொண்டாடியவர்களுக்கு இல்லாமலா போகும் .
எப்படி என் வீட்டார் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள் . எனக்கு இவர்களின் மாற்றம் தான் பெரும் வலியை தருகின்றது .என்மேல்
துரும்பு கூட படாமல் பார்த்துக்கொண்டவர்களை எது தடுக்கின்றது . என் தாலியா ?
கேள்விகளுடன் ...
இப்படிக்கு அவள்
கவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக