செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா சபரிமலை கோவில்? உச்சநீதிமன்ற வழக்கு விவரமும் கருத்துக்களும்....

ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா சபரிமலை கோவில்? உச்சநீதிமன்ற வழக்கு விவரமும் கருத்துக்களும்....



கடந்த காலங்களில் ஆண்கள் மட்டுமே விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்களுடன் 10 வயதுக்கு குறைவான சிறுமிகளும் 50 வயதுக்கு அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். காரணம், ஐயப்பன் சுவாமி பிரம்மச்சாரியாக இருப்பதால் பெண்களை அனுமதிக்க மறுப்பதாக கோவில் சார்பாக தெரிவிக்க படுகின்றது. உண்மை அதுவல்ல பெண்களின் மாதவிடாய்  காலங்களை தூய்மை அற்றதாக கருதியே இந்த தடை விதிக்க படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது. அறிவியல் இத்தனை உயரம் வளர்ந்தும் இன்னும் நாம் பெண்களின் இந்த நிலைமையை தூய்மை அற்றதாக கருதுவது மனித இனத்தின் முட்டாள்தனம். அது ஒருவித உடல் மாறுபாடு அவ்வளவே..

இத்தனை காலங்களாக பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த பல உரிமைகளை அவர்கள் மீட்டு எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று.  அவற்றுள் ஒன்று சபரி மலை ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுக்கும் ஒரு செயலும். இதனை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கவுடா, குரியன் ஜோசப் ஆகியோர் கொண்ட 3 நீதிபதிகள் பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோவில் நிர்வாகம் தத்தளித்து வருகின்றது.

கோவில் நிர்வாகம்  :
சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய தடை விதிப்பதற்கு பெரும்பாலான பெண்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

நீதிபதிகள் :

பெரும்பாலானோரின் கருத்தை அடிப்படையாக வைத்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசியல் சாசனத்தின்படிதான் நடக்க முடியும். அரசியல் சாசனத்திற்கு முன்பே இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஏற்க முடியாது. அரசியல் சாசனத்தை விட வழக்கமான நடைமுறைகள் பெரிது கிடையாது. பெண்கள் கோயிலுக்கு நுழைய தடை விதிப்பது, பாலின நீதிக்கு மிகவும் ஆபத்தானது'' என்றனர்.மேலும், 'கடவுளையோ, கடவுளின் சிலையையோ யார் வேண்டுமானாலும் வழிபடலாம். அப்படியிருக்க, பொது இடமான கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என எதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை விதிக்க முடியுமா? ஒரு விஷயத்தில் தடை என்பது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்'

எந்த உரிமையின் கீழ் அவர்கள் ஒரு பெண்ணை பொது இடமான கோவிலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். தேவசம் போர்டின் இந்த தடை உத்தரவை அரசியல் சட்டத்தின் எந்த கொள்கை ஆதரிக்கிறது? பாரம்பரிய நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தின் கோட்பாடுகளை மீறியதாக இருக்கக்கூடாது.
இந்து பாரம்பரியத்தில் தந்தையைவிட தாய் தான் மிகவும் போற்றப்படுகிறார். எனவே பெண்கள் கோவில்களுக்குள் நுழைவதை தடுக்க முடியாது' என்று தெரிவித்துள்ளனர்.

கோவில் நிர்வாகத்தின் அடுத்த பதிலாக, சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக இருப்பதால் பெண்களை அனுமதிக்க மறுப்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குரியன் ஜோசப், ''திருநங்கைகள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா?" என கேள்வி எழுப்பினார்.இதை தொடர்ந்து நீதிபதிகள், ''சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும். அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது? பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்ற காரணத்தால் இந்த பழக்க வழக்கங்கள், அரசியல் சாசனத்திற்கு உட்படாமல் இருக்க முடியுமா?சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில் தடை விதிக்கக் கூடாது. அரசமைப்புச் சட்டத்தைவிட பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும். வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காது.

இன்னும் எத்தனை காலங்கள் தான் பெண்களுக்கான உரிமைகளை நாம் பாரம்பரியத்தை காரணம் காட்டி மறுக்க போகின்றோம். அந்த காலங்களில் தாங்கள் உருவாக்கும் கோவில்களுக்கு தனித்துவம் இருக்க வேண்டும் என்பதனாலேயே ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.இதனை இன்னும் நம்பிக்கொண்டு இருக்காமல் பெண்களுக்கான உரிமைகளை அவர்களுக்கு அவளங்க வேண்டும்.

நிச்சயமாக உச்சநீதி மன்றம் இந்த வழக்கில் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்பையே வழங்கும். இது இந்த நாட்டில் உள்ள அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதையும் பாலின அடிப்படையில் நாம் யாரும் எதையும் தடுக்க முடியாது என்பதையும் இந்த உலகிற்கு உணர்த்தும்...

வாழ்க சமத்துவம்.....


நன்றி
ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக