செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சசிகலாவிற்கு வழிவிட போகும் ஜனநாயக சட்டம்....


இந்திய அரசியலமைப்பு சட்டம் நல்லவர்களும் தகுதி வாய்ந்தவர்களும் மக்கள் ஆதரவை பெற்றவர்களும் தேர்தலுக்காக காத்திருக்காமல் உடனடியாக ஆட்சியில் அமர வழிவகை செய்து தந்தது. பொறுப்பேற்று 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே போதும் என்கிற வாய்ப்பை கொடுத்தது. [2 ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்றவராக இருத்தல் கூடாது]



பல நேரங்களில் தகுதிவாய்ந்த, மக்கள் விரும்பிய பலரை காத்திராமல் பணியில் அமர்த்த உதவிட்ட இந்த சட்டம் சில நேரங்களில் தகுதி இல்லாத, மக்களுக்கு விருப்பம் இல்லாதவர்களும் ஆட்சி கட்டிலில் அமர வழிவகை செய்கின்றது.

நாம் என்னதான் முதல் அமைச்சர் வேட்பாளரை வைத்தும் கட்சியை வைத்தும் ஓட்டளித்தாலும் நாம் நேரடியாக தேர்ந்தெடுப்பது சட்டமன்ற வேட்பாளர்களை தான். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே முதல்வராக வர முடியும். தேர்ந்தெடுக்கப்படும் அந்த தலைவர் மக்களுக்கு விருப்பமானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே இங்கு முக்கியமான ஒன்று.

இந்த நிலை தான் இன்று தமிழகத்தில் நிலவுகின்றது. சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்தெடுக்க பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் விரும்பாவிட்டாலும் அவரை நிராகரிக்க கூடிய உரிமை மக்களுக்கு இப்போதில்லை என்பதே கடினமான உண்மை.

எந்த அரசியலமைப்பு சட்டம் தகுதி வாய்ந்த ஒருவரும் மக்களால் விரும்பக்கூடிய ஒருவரும் தேர்தலுக்காக காத்திருக்காமல் உடனடியாக பதவியேற்று பின்பு வெற்றி பெற்று கொள்ளலாம் என்கிற வாய்ப்பை கொடுத்ததோ அதே அரசியலமைப்பு சட்டம் தான் இன்று மக்களால் விரும்பப்படாத சசிகலாவிற்கும் வழிவிட போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக