வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தலையங்கம் : விவசாயிகளை நெல் பதறுகளாக எண்ணாதீர்கள்..

கடந்த 32 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியிலே வங்கிக்கடனை ரத்து செய்வது, வறட்சி நிவாரண நிதி வழங்குவது , காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.



ஆனால் தேர்தல் வெற்றிகளை கொண்டாட, ட்விட்டரில் பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற, போட்டிகளில் வெல்பவர்களுக்கு வாழ்த்துச்சொல்ல, வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க முடிந்த ஏழை குடும்பத்தில் இருந்து வந்ததாகவும் ஏழைகளை உயர்த்த பாடுபட போவதாகவும் வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த பிரதமர் திரு மோடி அவர்களுக்கு இந்த ஏழை விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை.



நேரம் இல்லையா அல்லது இந்த 30 விவசாயிகளுக்காக நாம் செல்வதா என்கிற எண்ணமா ? ஒருவேளை இப்போது நாம் சென்று சந்தித்துவிட்டால் இனி ஒவ்வொரு மாநிலத்தவரும் வந்து போராடுவார்கள் அவர்களையம் சந்திக்க வேண்டி வருமே என்கிற எண்ணமா ? உங்கள் எண்ணப்படியே போராடினால் தான் என்ன நீங்கள் அவர்களுக்கும் பிரதமர் தானே? உங்கள் மக்களை சந்திப்பதில் தராதரம் பார்ப்பது சரியல்லவே.

எப்படி இருந்தாலும் எந்த மாநிலத்தவர் வந்து போராடினாலும் அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை இரண்டாம்பட்சமாக கொண்டு முதலில் அவர்களின் பிரச்சனையை என்னவென்று கேட்டாலே நன்றாக இருக்கும்.

தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதிலும் பல விவசாயிகள் இறந்து போனதிலும் தமிழக அரசின் செயல்பாடு சரியில்லை என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. ஆனால் இன்னமும் தமிழக அரசு கண்ணை மூடிக்கொண்டுள்ளது.

சரியாக பார்த்தால் விவசாயிகள் வைக்க கூடிய கோரிக்கைகளுக்கு தமிழக அரசு தான் போராட்டம் நடத்தவேண்டும். நிதியை ஒதுக்காத மத்திய அரசிடம் முறையிடவேண்டியது யார் ? தமிழக அரசா ? ஏழை விவசாயிகளா? உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு வாக்குறுதி கொடுத்தும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லையே இதனை தட்டி கேட்க வேண்டியது தமிழக அரசா? வறட்சியால் ஏற்கனவே பாதி இறந்துபோன விவசாயிகளா?

விவசாயிகளை பதறுகளாக பார்க்காதீர்கள்.

நன்றி
பாமரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக