சில வாரங்களுக்கு முன்பாக 09/05/2016 அன்று நமது உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை போடுகின்றது. அதன்படி இந்த ஆண்டு முதல் மருத்துவ நுழைவு தேர்வினை நடத்தி அதன் மூலம் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறுகின்றது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்க்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முதலாவதாக நுழைவு தேர்வு எப்படி நடக்கும் என்று பார்க்கலாம். அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாளை கொண்டு இந்த தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வாகும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும். சரி அந்த வினாத்தாள் எந்த பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் என்று பார்த்தால் அது பெரும்பாலும் CBSE பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும். தமிழகம் போன்ற மாநிலங்கள் தங்களுக்கென ஒரு மாநில பாடத்திட்டத்தை கொண்டுள்ளன. பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளியில் மட்டுமே பயின்று வருகின்றார்கள். அப்படி இருக்கும் போது அவர்களால் நிச்சயமாக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர்கள் ஆக முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவு நிச்சயமாக கீழ்நிலையில் உள்ள மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதை தடுக்கும் என்பதில் ஐயம்மில்லை.
இதற்க்கு சிறந்த உதாரனமாக தொழிற்கல்வி பயில நடைமுறையில் இருந்த நுழைவுதேர்வு கடந்த 2006 ம் ஆண்டு சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது. அதன் பின்னரே வசதி குறைவான கிராமப்புற இளைஞர்களும் வசதி படைத்த நகர புற மாணவர்களும் எந்தவித் வேறுபாடும் இல்லாமல் தொழிற்கல்வி பயின்றனர். இதற்க்கு சாட்சியாக இன்றும் லட்ச கணக்கான மாணவர்கள் ஆண்டு தோறும் பட்டம் பெற்று வேலையில் சேர்ந்து வருகின்றனர்.
மருத்துவம் போன்ற முக்கியமான படிப்புகளுக்கு நுழைவு தேர்வு என்பது அவசியம் என்று கூறும் உச்சநீதிமன்றம் ஏன் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியவில்லை. அனைத்து விசயங்களிலும் அக்கறை எடுத்து சிறப்பு உத்தரவுகளை போட தெரியும் உங்களுக்கு நுழைவு தேர்வு கட்டாயம் என்று சொல்வதற்கு முன்பாக பாடத்திட்டத்தில் சமநிலை அவசியம் என்பது தெரியாமல் போனது எப்படி?
தேர்வு முடிவுகள் வரும் இந்த சமயத்தில் இந்த ஆண்டே நுழைவு தேர்வு அவசியம் என்று சொல்வது நியாயமா?
எத்தனையோ வழக்குகளுக்கு தவணை அளித்து கொண்டிருக்கும் நீங்கள் ஏன் இந்த வழக்கிற்கு தவணை அளித்து மாணவர்களின் கருத்துகளையும் பெற்றோர்களின் கருத்துக்களையும் கேட்கவில்லை?
அனைத்துக்கும் மேலாக, நம் நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்புற மாணவர்களுக்கும் கல்வி வழங்குவதில் சமநிலை உள்ளதா என்பதை ஆராயாமல் எப்படி உங்களால் தன்னிச்சையாக இந்த தீர்ப்பை வழங்க முடியும். கிரிக்கெட் சங்கத்தில் நிலவும் பிரச்சனைகளுக்காக மூத்த நீதிபதியை அமைத்து ஆராய சொல்லும் நீங்கள் நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களின் நலனினை கருத்தில் கொள்ளாமல் அவசரம் காட்டுவது ஏன் ?
தனியாக ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி நுழைவு தேர்வு என்றால், எதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தனியாக ஆண்டுதோறும் 12ம் வகுப்பு பொது தேர்வு தேவை இல்லாமல் நடத்தப்படுகின்றது? பண விரயம் கால விரயம் கருதி அதை தடை செய்துவிடலாமே?
உங்கள் தீர்ப்பை காணும்போது என் மனதில் எழுந்த கேள்விகள் இவை. உங்களுக்கும் இதே கேள்விகள் இருந்தால் பகிருங்கள். உங்களின் பகிர்வு நிச்சயம் கிராமப்புற மாணவர்களின் எழுச்சிக்கு ஒரு உதவியாக இருக்கும்.
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக