அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்படுகின்றது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. மத்தியில் ஆளும் அரசு தனக்கு வேண்டாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து செயல்படுவது வாடிக்கைதான். ஆனால் ஆளும் பிஜேபி அரசு வேண்டாத மாநில அரசுகளை கவிழ்த்து குடியரசு தலைவர் ஆட்சியினை கொண்டுவருவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளது. அரசியல் சாசனம் மத்தியில் ஆளும் அரசுக்கு அளித்துள்ள உரிமையை இந்த அரசு தவறாக பயன்படுத்தி வருகின்றது.
சில வாரங்களுக்கு முன்பாகத்தான் உத்திரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி MLA வை முதல்வராக அறிவித்த ஆளுநரின் உத்தரவு செல்லாது என நைனிடால் உயர்நீதி மன்றமும், ஹரிஷ் ராவத் க்கு தனது பெரும்பான்மையை காட்ட வாய்பளிக்காமல் அவரது ஆட்சியை ரத்து செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. மீண்டும் ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக உள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியாகி நிறைய நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் மத்தியில் ஆளும் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நபாம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. மொத்தம் 60 எம்எல்ஏக்கள். காங்கிரஸின் பலம் 47 ஆக இருந்தது. இதில் 21 எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு பாஜகவின் 11 எம்எல்ஏக்களும் 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர்.
இதற்கிடையே அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை அடுத்து, மாநில ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப் பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த கலிகோ புல் புதிய முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கு அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 2 சுயேச்சைகள், 11 பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் அறிவித்த இந்த உத்தரவு செல்லாது எனவும் மீண்டும் முந்தைய ஆட்சியே அருணாச்சல பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசை மத்தியில் ஆளும் அரசு தனது சுய வெறுப்புகளுக்காக அரசியல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவது என்பது கண்டிக்க தக்கது. உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பிஜேபி அரசுக்கு நல்ல பாடத்தை கற்பிக்கும் என்று நம்புவோம்.
ஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக