புதன், 20 ஜூலை, 2016

பியூஸ் மானுஷ் - ஒரு சமூகநலவாதிக்கு வந்த சோதனை...இன்னும் எத்தனை காலம் தான் கண்டுகொள்ளாமல் இருக்கப்போகின்றோம் தமிழர்களே!!!


சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கட்டப்பட வேண்டும் என்று கடந்த 8-ம் தேதி சேலம் மக்கள் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியவர்களில் மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருவர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வந்துள்ளனர். மற்றொருவரான சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷை ஜாமீனில் விடுவதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை செய்த காரணத்தால் நீதிமன்றம் ஜாமீனில் விடவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அது மட்டுமின்றி மத்திய சிறைச் சாலையில் அவரை கட்டி வைத்து 30-க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் கொடுமையான முறையில் தாக்கியுள்ளதாக, அவரது மனைவி மோனிகா தெரிவித்துள்ளார். [ Source: The Hindu Tamil ]

யார் இந்த பியூஸ் மானுஷ் :



பூவுலகின் நண்பர்கள் என்ற சமூக அக்கறை உள்ள அமைப்பின் மிக முக்கிய நபர்களில் ஒருவர்தான் இந்த பியூஸ் மானுஷ். இரு தலைமுறைகளுக்கு முன்பு துணி வியாபாரம் செய்ய ராஜஸ்தானில் இருந்து சேலத் துக்கு வந்த குடும்பத்தின் வாரிசு. பியூஸ் சேத்தியா இவரது உண்மைப் பெயர். சேத்தியா என்ற சொல் சாதியைக் குறிப்பதால் தன் பெயரை 'பியூஸ் மானுஷ்’ என்று மாற்றிக்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளில் சேலம் நகரத்தின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பலவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. 'சேலம் மக்கள் குழு’, 'சேலமே குரல் கொடு’ போன்ற அமைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்னைகளுக்காக அரசாங்கத்துடன் மல்லுக்கட்டிவரும் இவர், சேலத்தில் ஒரு பிரமாண்ட பறவைகள் சரணாலயத்தையே உருவாக்கி இருக்கிறார். கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் இருந்து சில பன்னாட்டு நிறுவனங்களைப் பின்வாங்க வைத்திருக்கிறார். 150 ஏக்கரில் ஒரு கூட்டுறவுப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேலான மரங்களை சேலம் மலைப் பகுதி களில் உருவாக்கி இருக்கிறார்.

இவரால் தமிழகம் அடைந்த நன்மைகள் :

> ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள்இவரால் நடப்பட்டன

> 2008-ல் 'ஜிண்டால் குழுமம்’ கஞ்ச மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்க வந்ததை தடுத்தது.

> வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கமான 'மால்கோ’ நிறுவனம் 1996-ம் ஆண்டில் இருந்து ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் இருந்து பாக்ஸைட் தாதுவை 2008 வரை வெட்டி எடுத்துக்கொண்டு இருந்ததை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடுத்தது.

>  பியூஸின் முக்கியமான பங்களிப்பு, கன்னங்குறிச்சியில் இருக்கும் மூக்கனேரி பறவைகள் சரணாலயம். இந்தப் பிரமாண்டமான ஏரியை இரண்டே வருடங்களில் ஒரு சரணாலயமாக மாற்றி இருக்கிறார்.




இன்னும் இந்த இயற்கையையும் நம்மையும் நமக்கு பின்னால் வரும் சந்ததிகளையும் காப்பாற்ற தன் வாழ்வை ஒரு பொருட்டென கருதாமல் போராடிவரும் பியூஸ் மானுஷ் இன்று சேலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்.

நாம் எப்பொழுதும் போல கணினிகளையும் மொபைல் போன்களையும் நோண்டிக்கொண்டே இருக்கின்றோம், எது நடந்தால் நமக்கென்ன என்று. கபாலி தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வருமா வராத என்று ட்விட் போடும் நாம் இந்த சமூக போராளியை மறந்துவிட்டது நம் சாபம்.

சசி பெருமாள் என்ற காந்தியவாதியின் மரணம் மறையாத நேரத்தில் பியூஸ் மானுஷின் கைது என்பது நாம் எதுவுமே செய்யவில்லையோ என்று நெஞ்சை உறுத்துகின்றது.

என்ன செய்ய வேண்டும் :

நாம் சமூக பணிகளை செய்யாவிட்டாலும் சமூகநலவாதிகளுக்கு சில தீய சக்திகள் தீமை செய்யும் போது நாம் அவர்கள் பின்னால் இருக்கின்றோம் என்று சமூக விரோதிகளுக்கு காட்ட வேண்டியது அவசியம்.

சமூகநலவாதிகள் தண்டிக்கப்படும் போது நாம் அந்த செய்திகளில் அதிக கவனம் செலுத்தி அதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.

எது எதையோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளும் நாம் இது போன்ற நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளுவதால் அந்த செய்தி நிச்சயம் சமூகத்தில் முக்கியத்துவம் பெரும். அதனாலேயே அவர்களுக்கு தீங்கு இழைக்க விரோதிகள் அஞ்சலாம்.

வாருங்கள் நாம் அனைவரும் இன்று போவுலகின் நண்பர்களுடன் இணைவோம். பின்வரும் இணைய முகவரிக்கு "நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம், பியூஸ் மானுஷ். கவலை வேண்டாம்" என்ற செய்தியை அனுப்பி நாம் அவருடன் இருப்பதை இந்த உலகிற்கு உரைப்போம்.

மின்னஞ்சல் : info@poovulagu.org

நன்றி
ஸ்ரீ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக